Nimalkumar Blog

Sunday, January 1, 2012

சாமி-ய பிடிக்கல [short story]


நாளைக்கு பிறந்தநாள்.. மறுபடியும் அந்த நாள் வர போகுது..
போன வருஷம் எடுத்த புது சட்டைதான் இப்போ நான் போட்டிருக்கறது..
Trouser-la ஒரு பொத்தான் மட்டும் விழுந்துடிச்சு.. அதை எடுத்து பாக்கெட்-ல போட்டு வச்சிருந்தேன்.. இப்போ கொஞ்ச நாளா அதையும் காணோம்..

போன பிறந்தநாளைக்கு பள்ளிக்கூடம் போகல.. அப்போ சேத்துவிடல..
நாலு வயசுக்கு அப்றம்தான் பள்ளிக்கூடம் சேர்க்கணும்னு வாத்தியார் சொல்லிட்டாரு.. அதனால வீட்லதான் இருந்தேன்..

பச்சை கலர் புதுசட்டை, அதே கலர்-ல trouser..
எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.. இருந்தாலும் நான் கேட்ட வெள்ளை சட்டை, காக்கி trouser வாங்கி தரலை..
பள்ளிக்கூடம் போனதுக்கு அப்புறம் வாங்கி தர்றதா சொல்லிட்டாரு அப்பா..
பக்கத்து வீட்டு ராஜு-வும் வினோத்-ம் தினமும் அதுதான் போடுறாங்க.. எனக்கு பாக்கும்போது ஆசையா இருக்கும்.
---

வீட்ல வெளிய உக்காந்து, சோத்து மணி அடிக்கற வரைக்கும் காத்துட்டு இருந்தேன்.. ராஜு, வினோத் கிட்ட புது சட்டைய காட்டுறதுக்கு..

ராஜு பாத்தவுடனே கேட்டான் - 'என்னடா கலக்கற.. புது சட்டையா ?'
'ஆமா.. இன்னைக்கு பொறந்தநாள்-டா.. நேத்து அப்பா டவுன் போயி வாங்கிட்டு வந்தாரு'
'பொறந்த நாள்னா chocalate தரனும்டா.. வச்சிருக்கியா?' - ராஜு கேட்டான்..

.... அடடா.. இது தோணவே இல்லையே-னு யோசிச்சுட்டே சொன்னேன் -

'ம்ம்ம்ம்..  நீ போன வாரம் வாங்கின ரப்பர் திரும்ப தரவே இல்ல.. அதுக்கு கழிச்சுக்கோ..'

ராஜு எதுவும் பேசாம வீடுக்குள்ள போயிட்டான்..
வினோத் chocalate இல்லைன்னு தெரிஞ்சு, முன்னாடியே வீடுக்குள்ள சாப்பிட போயிட்டான்..

..ம்ம்.. அடுத்து சாயங்காலம் வரைக்கும் காத்திருக்கணும் மத்த பசங்க கிட்ட சட்டை காட்டுறதுக்கு..
என்ன பண்றது அது வரைக்கும்?

வீட்ல எப்பவும் பாட்டி கூடயும் தங்கச்சி கூடயும்-தான் பொழுதன்னைக்கும் இருப்பேன்..
தங்கச்சி என்ன சொன்னாலும் தொட்டில்ல இருந்து குறு குறுன்னு பாத்துட்டே இருப்பா..
பாட்டிட்ட ஒரு நாளைக்கு பத்து தடவையாவது இதே கேள்விய கேட்பேன்.. -
'தங்கச்சி எப்போ பாட்டி என்கிட்டே பேசும்?'
பாட்டியும் ஒவ்வொரு தடவையும் சளைக்காம பதில் சொல்லும் - 'அடுத்த வருஷம் வாயாடியா பேசும்டா..'

பாப்பாவ ஆசையா தொட்டு தொட்டு பார்த்துப்பேன்.. அவதான் நான் தொட்டாலே அழ ஆரம்பிச்சுடுவா..
இதுக்காகவே அம்மா நல்லா என்னைய திட்டி விட்டுடும்..

பாட்டிக்குதான் நான் செல்லபிள்ளை.. அம்மாவ பொழுதன்னைக்கும் திட்டிட்டே இருக்கும்.. ஆனா என்னைய திட்டவே திட்டாது..
ரொம்ப நல்ல பாட்டி.. எனக்கு எப்பவும் அதுதான் காசு குடுக்கும்.. அம்மாக்கு தெரியாம பாட்டிக்கு ரோஜா மிட்டாய் வாங்கிட்டு வந்து தருவேன்..
பாட்டிக்கு ரோஜா மிட்டாய்னா ரொம்ப இஷ்டம்.. பல்லு இல்லைனாலும் விடாம சாப்பிடும்..
அது சாப்டுட்டு நாக்க வெளிய நீட்டி காட்டும்.. யார் நாக்கு நல்லா சிவக்குதுன்னு ஒரு போட்டி.. நான்தான் எப்பவும் ஜெயிப்பேன்!

போன பிறந்த நாளைக்கும் இப்டிதான்.. புது பச்சை சட்டை போட்டுட்டு பாட்டி கால்ல விழ சொல்லிச்சு அம்மா..
நான் போயி பாட்டி பக்கத்தில உக்காந்தேன்..
பாட்டி என் தலையில கை வச்சு வாய்க்குள்ள ஏதோ முனுமுனுத்துச்சி.. எல்லா பிறந்த நாளுக்கும் இப்டிதான் பண்ணி விடும்!
அப்புறம் சுறுக்கு பையிலஇருந்து காசு எடுத்து குடுக்கும்..
அன்னைக்கு எப்பவும் குடுக்கறதவிட 5 காசு ஜாஸ்தியா 15 ஜாஸ்தியா குடுத்திச்சு.. ரொம்ப ஜாலியா பாட்டிக்கு ரோஜா மிட்டாய் வாங்கி குடுத்தேன்..

அன்னைக்கு பாட்டி என்ன நெனச்சதோ தெரியல.. கைல வாங்கிட்டு ரொம்ப நேரம் சாப்பிடாம பாத்துட்டே இருந்தா..
நான் ஒவ்வொரு மிட்டாய முடிச்சுட்டு பாட்டிகிட்ட நாக்க நீட்ட சொல்லுவேன்.. ஆனா பாட்டி அன்னைக்கு முழுசும் அதை சாப்டவே இல்ல.. சாயங்காலம் என்னை கூப்பிட்டு தலைய தடவி கேட்டிச்சு -'பாட்டிக்கு பெரிய ஆளாகி என்னடா வாங்கி தருவ?'
'நிறைய ரோஜா மிட்டாய் வாங்கி தரேன் பாட்டி' - பளிச்சுன்னு சொன்னேன்
பாட்டிக்கு கண்ணுல தண்ணியா வந்துச்சு..
-----

இன்னைக்குதான் அம்மா ஞாபகப்படுத்திச்சி.. நாளைக்கு உனக்கு பிறந்தநாள்-னு..
மறந்தே போச்சு.. இந்த தடவை அப்பாட்ட என்ன கேக்கறது-னு ரொம்ப நேரம் யோசிச்சிட்டே இருந்தேன்..

போன தடவை மாதிரி இல்ல.. நிறைய நிறைய மாறி போச்சு..
பள்ளிக்கூடம் சேந்துட்டேன்..
பாப்பா கொஞ்சம் வளந்துட்டா..  'ம்மா', 'ப்பா'-லாம் சொல்றா! என்கிட்டே அழறதே இல்ல.. நான் பேசினா சிரிக்கிறா..
பாட்டி இப்போலாம் வீட்லயே இல்ல.. ஆஸ்பத்திரில தூங்கிகிட்டே இருக்கு.. நெறைய பேசறது இல்ல..
'வீட்டுக்கு எப்போ பாட்டி வருவ'-னு கேட்டுட்டே இருக்கேன்.. பாட்டி பதில் சொல்லவே மாட்டேங்குது..
அம்மாவும் 'பாட்டிய தொந்தரவு பண்ணாத'-னு சொல்லிடிச்சு

காலைல எந்திரிச்சி குளத்துக்கு போயிட்டு வந்ததும்.. அப்பா பீரோ-லருந்து புது ட்ரெஸ்ஸ எடுத்து குடுத்தாரு..
புது வெள்ளை சட்டை காக்கி trouser ..! எனக்கு புடிச்சிருந்தது..!

அம்மா கூப்பிட்டு சாமி முன்னாடி விழுந்து கும்பிட சொன்னாங்க..

இது என்ன புது பழக்கம்? எனக்கு பாட்டி ஞாபகம் வந்துடிச்சு..
நான் பூஜை ரூம்ல எட்டி பாத்தேன்.. பாட்டி மாதிரி இல்ல இந்த சாமி..

சாமி அமைதியா நின்னுடிருந்தது.. நான் வந்தத கவனிக்கவே இல்ல..
நான் மெதுவா சிரிச்சேன்.. ஒன்னும் சொல்லல..
'சாமி..' கூப்டேன்.. ஒன்னும் சொல்லல..
கொஞ்சம் குனிஞ்சு நின்னேன்.. தலையில கை வச்சு எதுவும் சொல்லல..
அதுகிட்ட சுறுக்கு பையும் இல்ல..
கடைசி வரைக்கும் என்னை பாத்து சிரிக்ககூட இல்ல..
சாமி ரொம்ப வித்தியாசமா தெரிஞ்சுது..

அம்மாட்ட காசு கேட்டு வாங்கினேன்.. ராஜு-க்கும் வினோத்-க்கும் chocalate வாங்கி குடுக்கணும்-னு யோசிச்சு, அதுக்கும் சேத்து 30 காசு வாங்கிட்டு கடைக்கு போனேன்..
என்ன chocalate வாங்குறது-னு தெரியாம முழிச்சிக்கிட்டே ரோஜா மிட்டாயே வாங்கினேன்..
இந்த தடவை கடைக்கார தாத்தா புது சட்டைய பாத்து வழக்கமா குடுக்கறத விட நெறைய மிட்டாய் குடுத்தாரு.. கை நிறைய ரோஜா மிட்டாய்!
பாட்டிட்ட சொன்னது ஞாபகம் வந்தது.. பெரிய ஆளாகி நிறைய ரோஜா மிட்டாய் வாங்கி தர்றதா சொல்லிருந்தேன்..
இப்போ இத குடுத்தா நெறைய சந்தோசப்படும்!


நேரா வீட்டுக்கு போனேன்.. ராஜு-கும் வினோத்-கும் மிட்டாய் குடுத்தேன்..
'என்னடா chocalate வாங்கலையா?' - ராஜு கேட்டான்
'எங்க பாட்டிக்கு ரோஜா மிட்டாய்தான் வாங்க சொல்லிச்சு'
..ம்ம்.. கொஞ்சம் யோசிச்சுட்டு..  'அப்போ எனக்கு ரெண்டு குடு..'-னு கேட்டு வாங்கிகிட்டான்
புது வெள்ளை சட்டை பத்தி அவன் கேக்கவே இல்ல.. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி..

வீட்டுக்கு ஓடி போயி அம்மாட்ட கேட்டேன் - 'பாட்டிய எப்போம்மா போயி பாக்கலாம்?'
'நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்'
'இன்னைக்கு போலாம்மா.. நான் பாட்டிட்ட புது சட்டைய காட்டிட்டு மிட்டாய் குடுக்கனும்மா.. '
'பாட்டிகெல்லாம் குடுக்க வேணாம்..  உள்ள பூஜை ரூம்ல சாமிக்கு வை'

சாமிக்கு எதுக்கு ரோஜா மிட்டாய்?-னு கோபமா வந்தது..
மெதுவா போயி சாமி முன்னாடி மிட்டாய் வச்சேன்.. கொஞ்ச நேரம் பாத்துட்டே இருந்தேன்..
'சாப்பிடு சாமி' - சொன்னேன்..  சாமி ஒன்னும் சொல்லல..
இது எப்பவும் இப்பிடிதான் அடம்பிடிக்கும்.. எதையும் சாப்பிடாது.. அம்மா இதுவரைக்கும் குடுத்த எதையும் சாப்ப்டதே இல்ல..
பாட்டியா இருந்தா சாப்டுட்டு நாக்கெல்லாம் காட்டும்-னு நெனச்சிகிட்டு, மிட்டாய திரும்ப எடுத்து பாக்கெட்ல போட்டுகிட்டேன்!

பாப்பா நல்லா தூங்கிடிருந்தா.. தொட்டில்ல எட்டி பாத்தேன்.. சேலைய ஈரம் பண்ணிட்டு அதுலயே தூங்கிட்டிருந்தா..
'குட்டீ' - கூப்பிட்டேன்!
சூப்பரா சிரிச்சுட்டே.. காலை உதைச்சி..  'ண்ணே'-னு சொன்னா..!
ஒரே ஆச்சர்யம்! முதல் முறையா என்னை 'ண்ணே'-னு கூப்டிருக்கா..!
பாட்டிட்ட கேட்டுட்டே இருப்பேன்.. எப்போ என்கிட்ட பேசுவா-னு..
இன்னைக்கு பேசிட்டா!
பாட்டி திண்ணை பக்கம் திரும்பி சத்தம் போட்டு சொன்னேன் -
'பாட்டி.. பாப்பா என்கிட்ட பேசறா பாட்டி..'

பாட்டிதான் வீட்ல இல்லையே.. பாட்டி இருந்த எடத்துல இப்போ சாமி போட்டோ மட்டும் அம்மா மாட்டி வச்சிருக்கு..  அந்த சாமி போட்டோ எதுவும் கண்டுக்காம காத்துல ஆடிட்டே இருந்திச்சு..

'என்ன சாமிடா இது'-னு திட்டிட்டு..  பாட்டிகிட்ட மறக்காம நாளைக்கு சொல்லணும்-னு நெனச்சிக்கிட்டு பாப்பாக்கு கன்னத்தில முத்தம் வச்சேன்.. சிவப்பாயிட்டா பாப்பா - வாயில இருந்த கலர் ஒட்டிகிச்சு! :)

எப்போ பாட்டிய பாக்கறதுன்னு ஒரே கவலையா இருந்துச்சு.. நாளைக்குதான் கூட்டிட்டு போவேன்-னு அம்மா சொல்லிடுச்சி..
பள்ளிக்கூடம் வேற போகணும் இன்னைக்கு.. முதல் மணி அடிச்சுட்டாங்க.. சீக்ரம் போகணும்.. இல்லைனா வாத்தியார் காப்பி வாங்கிட்டு வா-னு அலைய விட்டுடுவாரு..

ஒரே கவலையா உக்காந்திருந்தேன்.. எப்போடா பள்ளிக்கூடம் முடியும்னு காத்துட்டிருந்தேன்..

சோத்து மணி அடிக்கரப்போ அம்மா அவசரமா பள்ளிக்கூடம் வந்தாங்க..
வாத்தியார் கிட்ட ஏதோ பேசினாங்க..
பேசிட்டு நேரா எங்கிட்ட வந்தாங்க - 'பை எடுத்துக்கடா.. போகலாம்..'
'எங்கம்மா..?'
'ஆஸ்பத்திரி போகலாம்.. பாட்டிய பாக்க போகலாம்'

எனக்கு ஒரே குஷி.. இன்னைக்கே பாட்டிய பாக்கலாம்!
பாக்கெட்ல இருக்கற மிட்டாய் பொட்டலத்த தொட்டு பாத்துகிட்டேன்!
அம்மா கூட அவசரமா குதிச்சு குதிச்சு நடந்தேன்..

பஸ்ல போகும்போது அம்மா பேசவே இல்ல..

ஆஸ்பத்திரில நெறைய பேர் இருந்தாங்க.. பாட்டி தூங்கிட்டு இருந்துச்சி..
பக்கத்துல போயி கூப்டேன்...
'பாட்டி... பாட்டி..' - நாலு தடவை கூப்ட்டேன்
பாட்டி பேசவே இல்ல..
'ம்மா.. ஏம்மா பாட்டி பேசவே மாட்டேன்றாங்க?' - கேட்டேன்..
'பாட்டி பேசாது.. பாட்டிய சாமி கூப்டுகிட்டாங்க..'

எனக்கு புரியல.. ஆனா பெரிய கோபம் வந்துடுச்சி சாமி மேல..
சாமிய எனக்கு சுத்தமா பிடிக்காம போச்சு..

பாக்கெட்ல இருந்த ரோஜா மிட்டாய எடுத்து பாட்டி முன்னாடி காட்டினேன்.. எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சி..


1 comment:

  1. indha madiri mokka poda una tavira aale illa da machan

    ReplyDelete

Nimalkumar Blog Index

Nimalkumar Blog Page Footer