Nimalkumar Blog

Tuesday, January 11, 2011

காத்திருப்பு..

பச்சை மரத்தின் கீழ் நின்று உயரே நிமிர்ந்து பார்த்து, இனியும் இவ்வளவு சுகம் உண்டோ என நினைத்தபோது, மணி சரியாக காலை பத்து என்றது. எட்டு மணி முதல் என்னுடன் கம்பெனி கொடுத்த காக்கைக்கு கூட கொஞ்சம் சலிப்பு தட்டியிருந்தது. காக்கைக்கு தெரியுமா காத்திருப்பினில் உள்ள சுகம்?

--

மணி பத்தரை தொட்டபோது, காற்று அங்கே கொஞ்சம் என்னை தொட்டு திருப்பியது. அட, என்ன அதிசயம் - காற்றுக்குகூட என்னுடைய தூக்கத்தின் தூரம் தெரிந்திருந்தது. அதோ என்னுடைய காத்திருப்பின் முற்றுபுள்ளி கூப்பிடு தூரத்தில்.
சட்டென்று கவனித்தேன், தூரத்தில் நெருங்கும் அவள் முகத்தில் ஒரு பதட்டம். சற்றும் ஒத்துபோகாத அந்த முகமூடி இதுவரை அவளிடம் பார்த்ததில்லை. இரண்டரை மணி நேர காத்திருப்பு களைப்பு காணாமல் போய், எனக்குள் கவலை வந்து ஒட்டி கொண்டது. அதை கொஞ்சம் கூட்டி கும்மாளம் போடுவதில் இந்த மரத்திற்கு என்ன ஆனந்தமோ தெரியவில்லை - அங்கு வெளியே திமிறி படர்ந்திருந்த வேர் அவள் காலை பதம் பார்த்து விரலுக்கு சாயம் போட்டு முடித்தது. அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாத
அவளின் கண்கள் என்னுள் ஏதோ விபரீதத்தை எதிரொலித்தது - ஒரு வேளை கவனம் முழுதும் குவித்து கவலை பட இதை விட ஏதோ ஒன்று பெரிதாக உள்ளதோ?!
'அப்படி ஒன்றும் இருக்காது' என்று எனக்குள் மனதை தேற்றி கொண்டேன்..

அந்த கடைசி சந்திப்பின் முதல் வார்த்தை இப்படிதான் ஆரம்பித்தது -
'ஏய், பாத்து..'
'ம்.. பரவாயில்ல..'
'வலிக்குதா.. ஹாஸ்பிடல் போலாமா?'
'இல்ல, வேண்டாம்.. மனசில வலி இருக்கும்போது காயம் வலிக்காது'

யாரோ என்னை தூக்கி பள்ளத்தில் போட்டதாக ஒரு சறுக்கல் என் மனதிற்குள்..

'என்ன ஆச்சு? எதுவும் பிரச்சினையா? நான் இன்னைக்கு ஒரு முக்கியமான ஒரு விஷயம் சொல்லலாம்னு வந்தேன்.. ஆனா நீ ஏன் இப்படி பேசற?'
'ம்.. நானும் நேத்து நடந்த ஒரு முக்கியமான விஷயம் பத்தி கடைசியா சொல்லிட்டு போயிடலாம்னுதான் வந்தேன்'
'ஏன் இப்படி பேசற? என்ன ஆச்சு நேத்து? வீட்ல யாருக்கும் எதுவும்......?'
'இல்ல.. அது.. நான் கண்டிப்பா சொல்றேன்.  இப்போ வேணாம். நான் உணர்ச்சிவச பட்டுடுவேன். நீ கூப்பிட்ட காரணம் சொல்லு'
'ம். நான் ஒரு சந்தோசமான விஷயம் பேசலாம்னு வந்தேன். ஆனா நீ இருக்கற நிலமையில எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. இன்னொரு நாள் சொல்றேன்'
'என்னை விடு.. இது நிரந்தரம். ம்ம்ம்.... சரி. எதை பத்தின்னு மட்டும் தெரிஞ்சுகலாமா?'
'ம்.. நேத்து நீ கேட்டதுக்கான பதில்தான்..! நான் யோசிச்சு பார்த்தேன், எனக்கும் சரிதான்னு தோணிச்சு.. அதான் உங்கிட்ட அதை பத்தி.......'

பேசி கொண்டிருக்கும்போதே என் உதடுகளை அடைத்த அவளது விரல்கள், எனது குரலை தொண்டைக்கு அடியில் ஆழமாக குழி தோண்டி புதைத்தது. எனது சுற்றும் உலகம் சற்று வெற்றிடமாய் மாறி எனது இதய துடிப்பை ஒவ்வொரு தசை செல்லிற்கும் ஏற்றி என்னை திணற செய்தது..

'இல்ல.. தயவு செஞ்சி அதை பத்தி இனிமே பேச வேண்டாம்' - அவளின் குரல் கண்ணீரில் கரைந்து சன்னமாய் ஒலித்தது - என்னை சல்லி சல்லியை உடைத்தது.
உடைந்த என்னை விட்டு விட்டு, அவளின் அடுத்த வார்த்தைக்காக சிலையாய் தவம் நின்றேன்.

'நேத்து இருந்த நான் இப்போ நானா இல்ல.. நிறைய மாறிடுச்சி. ஒரே நாள்ல எல்லாமே மாறிடுச்சி..'

கட கட-வென சொல்ல ஆரம்பித்தாள் அவளின் கண்ணீரின் வேகத்தில்..

'நேத்து சாயங்காலம் நடந்த ஒரு விபத்து என்னோட வாழ்க்கைய அப்படியே மாத்தி போட்டுடுச்சி.. என்னோட அக்காவும் அத்தானும்..'

அவளால் தொடர முடியவில்லை.. இருந்தும் கண்களை மறைத்து விட்டு தொடர்ந்தாள்..

'...இப்போ நான் என்னை பத்தி யோசிக்கற நிலமையில இல்லவே இல்ல. எனக்கு இப்போ இருக்கற ஒரே கடமை என்னோட அக்கா குழந்தைங்கள பாத்துக்கறது மட்டும்தான்.. அதனால என்னை தயவு செஞ்சி வேற எதுவும் கேக்காத..'

சொல்லி விட்டு வந்த அதே பாதையில் வேகமாக விரைந்தாள்..  இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.. ஒரு வேளை இது கனவாக இருந்தால் இனி அந்த இரவு தூக்கத்தை அப்போதே தூக்கில் போட்டிருப்பேன்.. சில சமயங்களில் நனவு, கனவை விட கொடுமையானது.

சோகம், கவலை, விரக்தி - இவைகளில் எதுவுமே இல்லாமல் ஒரு வெற்றிட காத்தாடி போல் மெதுவாக எங்கேயோ நடந்தேன்..


நானும் யாருமே அறிந்திராத கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை அறியாமலே இருக்க ஆசைப்படுகிறேன் -
அந்த நாளின் முந்தைய கடைசி மாலைபொழுது - அவள் என்னிடம் காதல் சொன்ன தருணம் - நான் அவளை சந்தித்த அந்த மின்னும் நிமிடங்கள்- அவள் என்னிடம் நெருங்கி வந்து சொன்ன அந்த அழகிய சொற்கள், அந்த சொற்களில் பட்டும் படாமல் தெறித்த அந்த காதல் - எந்த ஆண்மகனுக்கும் வெட்கம் கற்றுத்தரும் அந்த தருணம், ஆகாயத்தில் குருவிகளை விஞ்ச துடிக்கும் இறக்கை கட்டிய மனது - அத்தனையும் ஆசுவாச படுத்த நான் எடுத்த ஒரு ஆயுதம்தான் தண்ணீர். பச்சை தண்ணீர் போலவேதான் என்றாலும் என்னை இன்னொரு உலகத்திற்கு இலவச இணைப்பாகவே அனுப்பி வைக்கும் மருந்து.. அன்று குடித்து விட்டு மொட்டை மாடியில் இருந்து தூக்கி போட்ட அந்த பாட்டில் என் காதலை ஒட்டு மொத்தமாக நொறுக்கி செல்லும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆம், அதுதான் அவளது அக்காவை விபத்திற்கு உள்ளாக்கியிருந்தது. எனது காதலுக்கும் அதுதான் முடிவு கட்டியிருந்தது..
இதை இன்று வரை உணராமல் உயிர் வாழ்கிறேன்.. எதையோ விற்று எதையோ வாங்கிய கதை..


ஒரு வருடம் ஓடிபோயிருந்தது.. இருந்தும் எனது காயங்கள் மட்டும் இன்னும் ரணமாய் -

இன்று -
நண்பர்கள் என்னை கட்டிபிடித்து காதருகில் புது வருட வாழ்த்து சொன்னபோதுதான் நினைவிற்கு வந்தது இன்றோடு நானும் என் பாட்டிலும் நொறுங்கி ஒரு வருடம் ஆகிவிட்டதென்று..

இன்று மட்டும் நான் அந்த கடைசி சந்திப்பு நடந்த பூங்கா பக்கம் போகவே கூடாதென புது வருட ஆரூடம் எடுத்தேன். இதற்காக நண்பர்களுடன் வெளியூர் பயணம் போகவும் ஒப்பந்தம் போட்டேன்..

என்னுடைய பாவம் எனக்கு தெரியாமலே என்னை தொடர்ந்ததோ என்னவோ தெரியவில்லை.. நான் பின்னால் உக்கார்ந்து சென்ற பைக்கிற்கு நேரம் சரி இல்லை.. படுத்து விட்டது நடு வழியில்.. பற்றாகுறைக்கு மழை வேறு புதுவருட கொண்டாட்டதிற்கு சரியாக பூமிக்கு வந்து சேர்ந்தது.. எனது அதிர்ஷ்டம் அல்லது துரதிஷ்டம் - நாங்கள் ஒதுங்கிய இடம் அதே பூங்கா.. அதே பச்சை மரம்..!

ஏதோ.. உலகத்தில் இருக்கும் தைரியத்தை எல்லாம் திரட்டி கொண்டு, கண்களுக்குள் தடுப்பு அணை போட்டு காத்திருந்தேன் மழை நிற்பதற்காக...

அப்போது -
திடும்-என சத்தம் கேட்டு திரும்பினேன்.. பாவம் ஒரு பெண் கையில் குழந்தையுடன் அதே மரத்தில் அடி பட்டிருந்தாள். கொஞ்சம் மரத்தின் மேல் கோபம் வரத்தான் செய்தது..
என்னுடைய அவளும் இந்த நிலையில்தானே இப்போது இருப்பாள் என மனதில் நினைத்து கொண்டேன்..
அந்த கணம், என்னையும் அறியாமல் அந்த பக்கம் திரும்பி நின்றிருந்த பெண்ணிடம் சொன்னேன் - 'பாத்துங்க'
'ம்.. பரவாயில்ல..' - எப்போதும் பரிட்சயமான அந்த குரல் என்னை தூக்கி வாரி போட்டது..
அவள் தான்.. அவளேதான்..
அவளும் தாடிக்குள் ஒளிந்திருந்த என்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள்..
நான் அவள் கண்களை பார்த்தேன்.. சற்று குனிந்து அவள் கையில் இருந்த குழந்தையையும் பார்த்தேன்.. வார்த்தைகள் உள்ளேயே ஒளிந்து கொண்டு வெளியே வர மறுத்தன..

அவள்தான் ஆரம்பித்தாள்-
'ஏய்.. நீயா இங்கயா?? எப்படி இருக்க? எவ்ளோ நாள் ஆச்சு உன்ன பார்த்து.. நான் இங்க உன்ன பாப்பேன்னு நெனச்சி கூட பாக்க்கல.. எங்க போயிட்ட நீ?? எத்தன நாள் உன்ன இங்க தேடிருப்பேன் தெரியுமா? இன்னும் கூட என்னால நம்பவே முடியல, நான் உன்ன ..................................'

அவள் பேசி கொண்டுதான் இருந்தாள்.. இருந்தும் என் மூளை அவளது கேள்விக்கு பதில்களை தேடவில்லை.. மாறாக என் உள்ளத்திற்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி கொண்டிருந்தது..
நான் மெல்ல கையை அசைத்து அந்த குழந்தையை தொட்டு பார்த்தேன்..

அவள் தொடர்ந்தாள் - 'என்ன இப்படி பாக்கற? அக்கா பையன்.. நல்லா வளர்ந்துட்டான்ல? அக்காவும் அத்தானும் கூட இப்போ நல்லா தேறிட்டாங்க.. வேலைக்கெல்லாம் போக ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாரேன்..'

இப்போது அந்த வெற்றிடம் முழுதும் ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்..

மீண்டும் அவளே தொடர்ந்தாள் -  'அப்புறம், இன்னும் உனக்கு கல்யாணம் ஆகலைல?'
நான் தலையை மட்டும் அசைத்தேன்..

'அப்போ, எப்போ வீட்ல வந்து பேசற?'

பட்டாம்பூச்சி கூட்டம் அத்தனையும் இப்போது உள்ளேயிருந்து தூக்கி பட்டம் போல் என்னை உயரே பறக்க விட்டிருந்தன..!

சுதாரித்து கொண்டு வெளியே சிதறிய என் வார்த்தைகள் -
'கால்ல அடிபட்டது வலிக்குதா.. ஹாஸ்பிடல் போலாமா?'
'இல்ல, வேண்டாம்.. மனசில சந்தோஷம் இருக்கும்போது காயம் வலிக்காது'


வாழ்க மகிழ்வுடன்,
நிமல்.

2 comments:

  1. Its an one night story and desperately wanted to bring it to friends' interest.

    ReplyDelete
  2. neraya tamil cinema la patha kadhai anyway good try....

    try level best nimal.....

    ReplyDelete

Nimalkumar Blog Index

Nimalkumar Blog Page Footer