Nimalkumar Blog

Saturday, September 3, 2011

தங்கை - தொடரும் க(வி)தை


பார்த்து பார்த்து பாசமாய் பழகாவிட்டாலும்,
தானாக நடந்த சின்ன சின்ன நிகழ்வுகள்
இன்றும் ஜில்லென நினைவுகளை நனைக்க தவறுவதில்லை

அந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் திரும்பி பார்த்திட 
என் தங்கையுடன் ஒரு சின்ன பயணம்..

--

தவழ்கிற வயதில் பார்த்து ரசித்த அதே சிரிப்பு -
இப்பொழுதும் ஞாபகத்திற்கு வரும் தூக்கத்தில்..

'உனக்கு இந்த சட்டை நல்லா இருக்கு-ணே' - என்று
அவள் சொன்ன சட்டைவெளுத்துபோய் பல வருடங்கள் ஆயிருந்தாலும் -
இன்றும் வாரம் இருமுறையாவது போட்டு ரசிக்கிறேன்..

ஜன்னலோர பயணத்தில் அவள் கை காட்டி ரசித்த 
வெள்ளை கரும்பும், கம்பு தினையும் 
எனக்கு முதன்முதல் களவு கற்று கொடுத்தது..

அந்த இரவு மழையில் ஒடுங்கி தூங்கியிருந்த என்னை -
'அண்ணே, இடி இடிக்குது.. உள்ள வந்து தூங்கறியா? 
இந்த போர்வை-யவாவது வச்சிக்கோ'-என்ற வார்த்தைகள் 
மழையில் நனையாத என்னை அவளது மழலையில் நனைத்திருந்தது..

பேருந்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி நான் சேமித்த 
பயண சீட்டு காசு அத்தனையும் கொண்டு போய் 
சினிமா கொட்டகையில் கொட்டுவதற்கு முன்பு 
அதில் இரண்டு ரூபாயை மட்டும் சிவப்பு வளையலாக மாற்றி -
அவளின் தெத்துபல் சிரிப்பாய் சேமித்து வைத்தேன்..

வெயிலில் ஊர் சுற்றி இருவரும் வாடி வதங்கி நின்றபோது
சோடா வாங்கி தர சொல்லி, அதை தான் குடிக்கும் முன் 
'நீ முதல்ல குடிச்சுட்டு குடுண்ணே..' - என்று நீட்டியபோது 
தணிந்த தாகம் போல் இன்று வரை எந்த தருணமும் அமையவில்லை..

'அண்ணே, பரீட்சைக்கு போறேன்.. வாழ்த்து சொல்லி அனுப்பு-ணே' 
என்று அன்றைக்கு தொலைபேசியில் கேட்டபோது -
நேர்முக தேர்விற்கு காத்திருந்த பதட்டம் கூட என்னுள் காணாமல் போயிருந்தது..

எல்லா தடங்களையும் இங்கே பதிவு செய்ய இதயம் முயன்றாலும்
கண்களில் வானிலை சரியில்லாமல் தடை போடுகிறது..

காலங்கள் கடந்தாலும்..
இப்பொழுதும் தொலைபேசி குரலில் பார்க்கிறேன் அந்த செல்ல சிரிப்பை..
அவளது குழந்தையின் மழலை சிரிப்பிலும் கூட..

ஒவ்வொரு பதிவும் என்றென்றும் அழியா கவிதை..
நான் முடியும் வரை தொடரக்கூடிய தொடர் கதை..!

வாழ்க மகிழ்வுடன்,
நிமல்
Definitely it is NOT my own experience and it cannot be too - rt?
Almost every post is the same way - Stealing others' waves and capturing it here!
Got a good chance to prove it so, for those who did not believe :)

No comments:

Post a Comment

Nimalkumar Blog Index

Nimalkumar Blog Page Footer