மீசை -
அந்த ஆசை அவளிடம் எப்படி விதைக்கப்பட்டதோ நினைவில்லை
சிறுவயது கட்டபொம்மன் வேஷமோ, இல்லை-
அவளது அப்பாவின் குத்தும் முத்தமோ..
பள்ளிக்கான அலங்காரத்தில் கடைசிநேர பரபரப்பில்கூட
அம்மாவுடன் தினமும் சண்டை வரும்
போட்டுவிடும் ரெட்டை சடையின் கடைசி நொடியில்
கற்றை கூந்தல் எடுத்து மீசை வைத்து கண்ணாடி பார்ப்பாள்
அம்மாவின் திட்டுக்கு நடுவே சிணுங்களுடன் கேள்விவேறு -
'மீச வச்சா நல்லாதானே இருக்கு, ஏன் திட்டுற?'
'நீ பொம்பள புள்ள.. மீசலாம் வைக்ககூடாது '- என அம்மா கூற
'இதெல்லாம் ஒரு காரணமா? ' -என கோபித்து கொள்வாள்
மீசை பெண்ணுக்கு சாத்தியபடாது என்றுணர
அவளுக்கு பன்னிரண்டு வயதுகள் தேவைப்பட்டன
அதன்பிறகு எப்போது மறந்தாளோ - ஞாபகம் இல்லை..
அப்பா மாப்பிள்ளை பார்த்தபோது
அவள் போட்ட முதல் நிபந்தனை - மீசை!
அப்பாவிடம் சிரிப்பு மட்டுமே பதிலாய் கிடைத்தது..
அவளிடம் புகைப்படம் காட்டி சம்மதம் கேட்டபோது
அழுகையே வந்துவிட்டது -
படத்தில் மாப்பிள்ளை முழுக்க மளித்து
சிக்கனமாய் சிரித்திருந்தார்!
ஏதோதோ சமாதானம் சொன்னார்கள் -
கணினி பொறியாளராம், கை நிறைய சம்பளமாம்..
காராம்.. வீடாம்..
யாருக்கு வேண்டும் இதெல்லாம்?
புகைப்படத்தை வெறித்து பார்த்துகொண்டே
கற்றை கூந்தல் எடுத்து மீசை வைத்து பார்த்தாள்..
'என்ன அம்சமாக இருக்கிறது! இதைப்போய் யாராவது எடுப்பார்களா? '
அதன்பிறகு இப்போதும் அவ்வப்போது
அவளுடைய "அவரிடம்" மீசை பற்றி கேட்டுவைப்பாள்
சாதகமான பதில் இதுவரை வந்த பாடில்லை..
இன்று மறுபடியும் அந்த நினைவுகள் அவளை பிச்சி தின்ன -
திடீரென சேர்ந்து கொண்டது வாந்தியும் மயக்கமும்..
நொடியில் சுதாரித்து சட்டென பிரகாசமானாள் -
துள்ளி குதித்து கண்ணாடி முன் நின்று ஆடை விலக்கி
கற்றை கூந்தல் எடுத்து வயிற்றில் மீசை வைத்தாள்..
கனவு மெய்ப்பட வேண்டும்!
-----------------------------
வாழ்க மகிழ்வுடன்,
நிமல்