தொட்டில்கயிறு இழுப்பில்
கண்மூடி தூங்கினோம்
பள்ளி ஈர்குச்சி மிரட்டலில்
புத்தகம் வெறுத்தோம்
நட்பில் பகிர்ந்த பழக்கங்களில்
அர்த்தங்கள் பல அறிந்தோம்
காதலின் கண்ணசைவில்
கவிதையாய் மாறினோம்
குடும்பமெனும் கடிவாளம் மாட்டி
எங்கோ ஓடி ஏதோ தேடினோம்
அனுபவம் என்ற அலைக்கழிப்பில்
மனம் உலர்ந்து உதிர்ந்தோம்
முடி நுரைத்து கண் புரைத்தபோது
வயதும் மனதும் தளர்ந்தோம்
தலைமுறை எட்டி தள்ளியபோது
கடைசியாய் கடவுள் தேடினோம்
பகட்டான பல்லக்கின் சுகத்தில்
ஆடி அசைந்து பயணம் முடித்தோம்.
--
பிறந்து வளர்ந்தோம் -
தளர்ந்து மறைந்தோம் -
இடைப்பட்ட கொஞ்ச காலத்தில் -
அடுத்தவரின் கைகளில் பொம்மைகள் ஆனோம்..!
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கடைசிவரை,
காற்றில் தொங்கவிடப்பட்ட ஒரு முற்றுபுள்ளி-யாகவே ( ? ) ஆடி அடங்குகிறது..
வாழ்க மகிழ்வுடன்,
நிமல்