கண் சிமிட்டும் நேரத்தில், ஏதோ ஒன்று குறைகின்றதே என்னுள்..
வயதோ? - இத்தனை நாள் வாழ்ந்ததற்கான அத்தாட்சி அதுதானே
அது மறந்து உன் முன் மழலையாய் மாறி போனேனே..
கனமோ? - நீ என்னை கடந்து செல்லும்போதெல்லாம்
புவியீர்ப்பு விசை தாண்டி மேகங்கள் நடுவே நீந்த கற்றேனே..
நினைவோ? - இத்தனை சிந்தனைகள் ஒரு போதும் எட்டி பார்த்ததில்லையே
ஏனோ இன்று கனவைக் கூட கவிதையாய் கண்டேனே..
கடைசியாக கண்டு கொண்டேன், தொலைந்தது என் இதயம் என்று..
இருந்தது ஒன்றுதானே, போனால் போகட்டுமென விடுவதற்கு
உன்னிடமே கேட்கிறேன் பிரச்சினை எப்படி தீர்ப்பதென்று..
என் கேள்விக்கு பதிலாக ஒரு புதிர் புன்னகை கொடுத்தாய் -
அந்த சின்ன சிரிப்பிலே புரிய வைத்தாய் -
தொலைந்து போனது இதயம் மட்டுமல்ல, அத்தனையும்தான் என்று..
குற்றத்தை நீ ஒப்புகொண்டாய் - தண்டனையை நான் ஏற்று கொண்டேன்
அன்று முதல் -
கடிகாரத்தில் கால பற்றாக்குறை கண்டேன்
காலம் கடந்தாலும் காத்திருக்க கற்று கொண்டேன்
தொலைபேசி கட்டணம் காற்றாய் பறக்க கண்டேன்
வங்கி கணக்குகள் கட்டுக்கடங்காமல் குறைய கண்டேன்
பொறுமையின் எல்லையில் காலடி தடங்கள் பதிய கண்டேன்
கொஞ்சம் நஞ்சமிருந்த சுதந்திரம் சுருங்க கண்டேன்
கண்மூடி தூங்கும்போது நிம்மதி கண்டேன்
மாற்றுவது கடினமென கண்டேன் -
மாறுவது எளிதென கண்டேன்
கண் சிமிட்டும் நேரத்தில் தொலைத்தது, என் வாழ்கையென கண்டேன் -
உன் ஓர பார்வையிலே..
"
- நிமல்
Disclaimer: This is 100% purely an imaginary poetry and believe me, no real characters involved..! :-)